விளையாட்டு

ரூ.300 கோடி செலவில் கட்டப்படும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் ; ஒப்புதல் அளித்த பிசிசிஐ

Rishan Vengai

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் சுமார் 300 கோடி ரூபாய் செலவிலான புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு பிசிசிஐ குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவிருக்கும் இந்த ஸ்டேடியத்திற்கு, உத்தரப்பிரதேச அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது. இந்த புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்காக, உத்தரபிரதேச அரசு ஏற்கனவே 121 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சுமார் 30,000 இருக்கைகளுடன் கட்டப்படவிருக்கும் இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, உத்திர பிரதேசத்தில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியங்களின் எண்ணிக்கை மூன்றாக உயரவிருக்கிறது. ஏற்கனவே லக்னோ மற்றும் கான்பூர் ஸ்டேடியங்கள் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது மூன்றாவதாக வாரணாசியிலும் அமைக்கப்பட உள்ளது.

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடங்கிய பிசிசிஐ குழுவானது, ஸ்டேடியம் கட்டுவதற்கு முழு ஒப்புதலையும் வழங்கியுள்ளது. அந்த குழுவில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த புதிய கிரிக்கெட் ஸ்டேடியமானது வாரணாசி மட்டுமல்லாமல், பீகாரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களையும் இலக்காகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. சுமார் 31 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய ஸ்டேடியம் கட்டப்படவிருக்கும் நிலையில், உ.பி அரசானது அந்த இடத்தை உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைக்கிறது. அதுமட்டுமல்லாமல் குத்தகைக்கான காலத்தை மேலும் 90 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கிரிக்கெட் மைதானத்துக்காக ரூ.300 கோடியை செலவிட பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து வாரணாசியில் மைதானம் கட்டுவதற்கான முயற்சிகளை மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் தொடங்கி செயல்பட்டுவருவதாக தெரிகிறது. மேலும் கடந்த புதன்கிழமை அன்று பிசிசிஐ குழுவானது ஸ்டேடியம் கட்டுவதற்கான உத்தேச இடத்தை பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.