Neeraj Chopra web
விளையாட்டு

பாரீஸ் டைமண்ட் லீக் | 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

பாரீஸ் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

Rishan Vengai

2023-ம் ஆண்டு நடந்த டைமண்ட் லீக்கில் வெற்றி பெற்றதற்கு பிறகு, 2 வருடங்கள் கழித்து பாரீஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

கடந்த மாதம் கத்தாரில் நடைபெற்ற தோஹா டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் வரை வீசி 90 மீட்டரை கடந்த முதல் இந்தியராக சாதனை படைத்தாலும், வெள்ளிப்பதக்கத்தை மட்டுமே நீரஜ் சோப்ராவால் வெல்ல முடிந்தது. 91.06 மீட்டர் எறிந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இந்நிலையில் தோஹா டைமண்ட் லீக்கில் விட்டதை பாரீஸ் டைமண்ட் லீக்கில் பிடித்த நீரஜ் சோப்ரா, ஜூலியன் வெபரை பின்னுக்கு தள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.

88.16 மீட்டர்.. சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா!

பாரீஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் 90 மீட்டருக்கு மேல் எறிந்த 5 வீரர்கள் பலப்பரீட்சை நடத்தினர். கடினமான ஒரு போட்டிக்கு இடையே முதல் எறிதலையே 88.16 மீட்டர் தூரத்திற்கு எறிந்த நீரஜ் சோப்ரா ஆதிக்கம் செலுத்தினார். அவரது அடுத்தடுத்த முயற்சி 85.10 மீட்டரும், அதைத் தொடர்ந்து மூன்று ஃபவுல்களும், இறுதி எறிதல் 82.89 மீட்டர் தூரமாக இருந்தது.

நீரஜ் சோப்ராவிற்கு போட்டியாக வெபர் 87.88 மீட்டர் வீசிய போதும், அவரால் அதை தாண்டி வீசமுடியவில்லை. அதனால் வெபர் இரண்டாவது இடத்தை பிடித்தார். 86.62 மீட்டர் வீசிய பிரேசிலின் லூயிஸ் மௌரிசியோ டா மூன்றாவது இடத்தை பிடித்தார்.