விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய நீரஜ் சோப்ரா - காரணம் என்ன?

காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய நீரஜ் சோப்ரா - காரணம் என்ன?

JustinDurai

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதில் இருந்து இந்தியாவின் தடகள வீரர் நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக விலகி உள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்க உள்ளனர். வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காயத்திலிருந்து மீண்டு, முழு உடற்தகுதி பெற ஒரு மாத காலம் ஆகும் எனத் தெரிகிறது. அதுவரை அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனவே நீரஜ் சோப்ரா  காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா இன்று தெரிவித்தார்.

ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி விளையாட்டு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தமிழகத்தின் மற்றொரு பிரக்ஞானந்தாவாக உருவாகும் 4 வயது சிறுவன் - யார் இந்த ஸ்டீஃபன்?