விளையாட்டு

‘இந்த ரன்கள் போதுமா?’ மிடில் ஆர்டர் பற்றி கோலி கருத்து!

‘இந்த ரன்கள் போதுமா?’ மிடில் ஆர்டர் பற்றி கோலி கருத்து!

rajakannan

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதலாக ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில், மிடில் ஆர்டரில் இன்னும் கூடுதல் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற கேப்டனின் கருத்து முக்கியமானது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. பந்துகளை வீணடிக்காமல் இருவரும் ரன்களை சேர்த்தனர். அதனால், 18 ஓவரில் இந்திய அணி 100 ரன்கள் எட்டியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்கள் சேர்த்தது. நேர்த்தியாக விளையாடிய தவான் 67 பந்தில் 66 ரன்களும், ரோகித் 87(96) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் விராட் கோலி, அம்பத்தி ராயுடு இணை ஆட்டத்தை கையிலெடுத்தது. 

26வது ஓவரில் களமிறங்கிய கோலி 40வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். எப்பொழுதுமே 20-40 ஓவர்கள் பேட்ஸ்மேன்கள் நிதானமாகத்தான் விளையாடுவார்கள். அதேபோல், கோலியும் பந்துகளை வீணடிக்காமல் 45 பந்தில் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்த போது இந்திய அணி 39.1ஓவரில் 236 ரன்கள் எடுத்திருந்தது. 

ஆனால், அடுத்த 11 ஓவர்களில் இந்திய அணியால் 100 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை என்பதுதான் துரதிருஷ்டவசமானது. கடைசி ஓவரில் 21, 49வது ஓவரில் 14 ரன்கள் என கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் அடிக்கப்பட்டது. அதுவும் 40-45 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. 42வது ஓவரில் மட்டுமே இரண்டு பவுண்டரி அடிக்கப்பட்டது. மீ்தமுள்ள 41, 43, 44, 45 ஆகிய ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. 

46, 47, 48 ஓவர்களில் முறையே 9, 7, 6 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் கூட ஓவருக்கு 10 ரன்கள் கூட அடிக்கப்படவில்லை. 48வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரில் அடித்த தோனி, அடுத்த 3 பந்துகளை டாட் ஆக்கினார். முன்னதாக 41வது ஓவரில் முதல் பந்தில் தோனி ஒரு ரன் அடிக்க அடுத்த 5 பந்துகளை ராயுடு டாட் ஆக்கினார். கடைசி 10 ஓவரில் 16 பந்துகளில் ரன் எதுவும் அடிக்கப்படவில்லை. 

35வது ஓவரில் இருந்து 39வது கோலி இருந்த நேரத்தில் கூட 29 ரன்கள் அடிக்கப்பட்டது. விராட் கோலிக்கு பின்னர் விளையாடிய ராயுடு, தோனி இருவரில் யாரேனும் ஒருவர் வேகமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி இருக்க வேண்டும். விக்கெட்கள் கைவசம் இருந்த நிலையில், போட்டி மந்தமானதால் 350 - 360 ரன்களை அடிக்க முடியவில்லை. அதனால், போட்டி மந்தமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள மைதானத்தில் உரிய ரன்களை அடிப்பதே ஒரு சிறந்த அணிக்கு அழகு. 350 ரன்கள் குவிக்க முடியாமல் போனது சிக்கலானது. உலகக் கோப்பை தொடர் நெருங்கி உள்ள நிலையில், ஒரு சிறந்த அணியாக இந்தியா உருவாக இவையெல்லாம் தடையாக இருக்கும். தோனி தன்னை மீண்டும் தன்னை நிரூபித்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. 33 பந்துகளில் 48 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான்...ஆனால், அவர் டாட் பந்துகளை குறைத்து பெரிய ஷாட்களை அதிகம் அடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை. அதுதான் அணிக்கும், அவருக்கும் உதவியாக இருக்கும்.

வெற்றிக்கு பிறகு பேசுகையில் விராட் கோலியும், ஆட்ட நாயகன் ரோகித் சர்மாவும் ஒருசேர இந்த ரன்கள் போதாது என்பதை கூறியிருக்கிறார்கள். விராட் கோலி பேசுகையில் இதனை அழுத்தமாக பதிவு செய்தார். 

ராட் பேசுகையில், “பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல் சீராக செய்தோம். 325 ரன்கள் என்பது ஒரு அளவானது(குறைவில்லாத). நியூசிலாந்து பேட்டிங்கை பொறுத்து பார்த்தால் இது அதிகமானது இல்லை. இருப்பினும், இது சீரான ஆட்டம்தான். தேநீர் இடைவெளிக்கு பின்னர் 34-40 ஓவர்களில், சீராக ரன்களை குவிக்க முயற்சித்தேன். அதனால், 340-50 ரன்கள் எட்டிருக்க முடியும். நான் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வரும் பேட்ஸ்மேன் கொஞ்ச நேரம் எடுக்க வேண்டியிருக்கும். உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இதனையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளையில், 15-20 ரன்கள் நாம் அதிகமாக அடித்திருக்க வேண்டும்” என்று கூறினார். ரோகித் பேசுகையிலும், 325 என்பது சம அளவான ஸ்கோர் தான் என்பதை பதிவு செய்தார். 

அதனால், உலகக் கோப்பையை வெல்வதற்கன பலம் பெற, இந்த மிடில் ஆர்டர் பிரச்னையை இந்திய அணி விரைவில் தீர்த்தே ஆக வேண்டும்.