விளையாட்டு

தேசிய கிக் பாக்சிங் போட்டி: தலையில் பலத்த காயமடைந்த அருணாச்சலப் பிரதேச வீரர் மரணம்

webteam

தேசிய அளவிலான கிக் பாக்சிங் விளையாட்டுப் போட்டியில் தலையில் பலத்த காயமடைந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான யோரா டாடே என்பவர், மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவருடன் மோதினார்.

போட்டியின் போது, மகாராஷ்ட்ரா வீரர் தாக்கியதில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் யோரா டாடேவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு மயக்கமாக வருவதாக அவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

யோரா டேட்டுக்கு மூளையில் ரத்தம் உறைவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது உடல் அருணாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

முன்னதாக, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்தை நிவாரணமாக யோரா டேட் குடும்பத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.