சிட்னியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடராஜன்!
இந்திய அணிக்கு புதிய வருவாக நம்பிக்கை நட்சத்திரமாக கிடைத்தவர் தமிழக வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை மட்டுமல்ல பிசிசிஐ நிர்வாகத்தின் நம்பிக்கையையும் வென்றதால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக வாய்ப்பு கிட்டியது. ஆனால், காலத்தின் அதிர்ஷ்டம் அவருக்கு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னர், டி20 தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட் சாய்த்து தன்னுடைய வாய்ப்புக்கு நியாயம் செய்தார். டி20 தொடரை வென்ற பின்னர் கேப்டன் விராட் கோலி தொடரை வென்றதற்கான கோப்பையையும், ஹர்திக் பாண்யா தொடர் நாயகன் விருது வென்றதற்கான கோப்பையையும் நடராஜன் கைகளில் கொடுத்து அழகு பார்த்ததெல்லாம் அவ்வளவு நெகிழ்ச்சியான சம்பவம்.
இதனையடுத்து, டெஸ்ட் தொடருக்கான அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் நெட் பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். டி20 தொடருக்கு பின்னர் சிட்னியின் பல இடங்களில் தான் சுற்றிப் பார்த்த இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில்தான், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இருக்கும் தமிழக வீரர் நடராஜன் தேவாலயம் முன்பு நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருடன் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இருக்கும் போட்டோவும் இடம்பெற்றுள்ளது.