விளையாட்டு

விராத், டிவில்லியர்ஸ் விக்கெட் எங்கள் அதிர்ஷ்டம்: தினேஷ் கார்த்திக்!

விராத், டிவில்லியர்ஸ் விக்கெட் எங்கள் அதிர்ஷ்டம்: தினேஷ் கார்த்திக்!

webteam

விராத் கோலியும் டிவில்லியர்ஸும் கடைசி வரை நின்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம், 43 ரன்களும், டிவில்லியர்ஸ் 44 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் வினய்குமார், நிதிஷ் ராணா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

177 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணிக்கு வழக்கம் போல் சுனில் நரைன் அதிரடி தொடக்கம் தந்தார். 19 பந்துகளை சந்தித்த அவர் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடி காட்ட 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. வில்லியர்ஸும், விராத் கோலியும் கடைசி வரை நின்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம். அவர்கள் விக்கெட்டை வீழ்த்திவிட்டோம். இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் இந்த அணிக்காக விளையாடுவது சிறப்பாக இருக்கிறது’ என்றார்.

பெங்களூர் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘நான் உட்பட பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிகம் ரன் குவித்திருக்க வேண்டும். பத்து பதினைந்து ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும். நான் அதிகமான டாட் பந்துகளை சந்திக்க வேண்டியதாகவிட்டது. பகுதி நேர பந்துவீச்சாளர் (ராணா) என்னையும் வில்லியர்சையும் அடுத்தடுத்து அவுட் ஆக்கிவிட்டார். இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருந்தும் நாங்கள் நன்றாகவே விளையாடினோம்’ என்றார். 

அதிவேக அரை சதம் அடித்த சுனில் நரேன் கூறும்போது, ‘என்னை ஓபனிங் பேட்ஸ்மேனாக நினைத்துப் பார்க்கவில்லை. வந்த பந்துகளை அடித்து ஆடினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் பந்திலேயே நான் அவுட் ஆகியிருந்தாலும் எனக்கு ஓகே.வாகத்தான் இருந்திருக்கும்’ என்றார்.