சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கடைசிப் போட்டிக்குப் பின்பு உரையாற்றியதைக் கேட்டு நானும் கிறிஸ் கெயிலும் அழுகையை அடக்கப் போராடினோம் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிர்க் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். சச்சின் தன்னுடைய 200 ஆவது டெஸ்ட் போட்டி, அதாவது கடைசி டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்ற பின்பு, சச்சின் கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு குறித்து ஒரு நீண்ட உரையாற்றினார். மிகவும் புகழ்ப் பெற்ற அந்தப் பேச்சை கிரிக்கெட் உலகமே கண்கலங்கிக் கேட்டுக்கொண்டு இருந்தது.
இப்போது அதன் நினைவலைகளை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிர்க் எட்வர்ட்ஸ் "கிரிக்ட்ரேக்கர்" இணையதளத்திற்காக இன்ஸ்டா உரையாடலின்போது பகிர்ந்துகொண்டார், அப்போது "சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியின்போது நானும் அங்கிருந்தேன். அது ஒரு உணர்ச்சி மிகு தருணம். சச்சின் பேசும்போது நான் கண்ணாடி போட்டுக்கொண்டேன். என் பக்கத்தில் கெயில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது எங்களால் முயன்ற வரை கண்ணீர் சிந்தவிடாமல் முயன்ற வரை அடக்கிக்கொண்டோம். அது ஒரு உணர்ச்சி மிகுந்த தருணம்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "இனியும் இந்த மனிதனை கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிப் பார்க்க முடியாதே என்ற வருத்தம்தான். அந்தத் தொடரில் ஆடும் லெவனில் நான் விளையாடவில்லை. ஆனால் சச்சினிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன். இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து தடுமாறியபோது எனக்கு அவர் குறுஞ் செய்தி அனுப்பினார் அதில் "இதுபோன்ற கடுமையான சூழ்நிலை வருவது சகஜம்தான், தளர்ந்துவிடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்" எனக் கூறியிருந்தார். அது எனக்கு மனவலிமையைக் கொடுத்தது" என்றார் எட்வர்ட்ஸ்.