விளையாட்டு

"இந்திய அணியில் எனக்கான இடம் எப்போதும் இருக்கும்!" - ரஹானே

"இந்திய அணியில் எனக்கான இடம் எப்போதும் இருக்கும்!" - ரஹானே

jagadeesh

இந்திய அணியில் எனக்கான இடம் எப்போதும் இருக்கும், எனவே அது குறித்து எனக்கு கவலையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு, டெஸ்ட் தொடரை வென்று திரும்பிய ரஹானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மனம்திறந்து பேசியுள்ளார் ரஹானே அதில் " இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி தான் கேப்டனாக இருப்பார். நான் அவரது துணை கேப்டனாக இருப்பேன். அவர் இல்லாத சூழ்நிலையில் இந்திய அணியை வழிநடத்துவது எனது பணி.அப்போது இந்திய அணியின் வெற்றிக்காக சிறந்த கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு" என்றார்.

மேலும் " கோலியுடனான எனது உறவு எப்போதுமே சுமுகமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய தொடரில் எனது பேட்டிங்கை அவர் பாராட்டியுள்ளார். இருவருமே இந்திய அணிக்காக உள்நாட்டிலும், அந்நிய மண்ணிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடியுள்ளோம். அதனாலேயே பேட்டிங்கில் அவா் 4-ஆவது வீரராகவும், நான் 5-ஆவது வீரராகவும் இறங்குகிறோம். களத்தில் எதிரணி பௌலிங் குறித்து பகிர்ந்துகொள்வோம். பேட்டிங்கிற்கு தேவையான எச்சரிப்போம்" என்றார் ரஹானே.

தொடர்ந்து பேசிய அவர் " கேப்டனாக இருப்பது பெரிய விஷயமல்ல. அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு நாம் எவ்வாறு செயலாற்றுகிறோம் என்பதே முக்கியமானது. அந்த வகையில் இதுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்திருக்கிறேன். இனியும் அப்படியே செயலாற்றுவேன் என நம்புகிறேன். ஒரு நல்ல கேப்டனை உருவாக்குவது அணியின் அனைத்து வீரா்களே. ஆஸ்திரேலிய தொடரின் வெற்றி அணியினருக்கு கிடைத்த வெற்றியே. உண்மையில் இந்திய அணியில் எனக்கான இடம் ஆபத்தில் இருப்பதாக எப்போதுமே நான் உணா்ந்ததில்லை" என்றார் ரஹானே.