விளையாட்டு

"சிஎஸ்கே உடனான உறவு முடிவுக்கு வந்தது!" - ஹர்பஜன் சிங் ட்வீட்

jagadeesh

சிஎஸ்கே அணியுடனான தன்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதில் ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, சுரேஷ் ரெய்னா, கரன் சர்மா, இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசல்வுட், கேதர் ஜாதவ் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட ஆரம்பித்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான தகவலை பதிவிட்டுள்ளார்.

அதில் "சிஎஸ்கே அணியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. சிஎஸ்கே அணிக்காக விளையாடியது மிகச்சிறந்த அனுபவம். இந்த அணியுடன் எனக்கு அழகான நினைவுகள் இருக்கிறது, நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். இனி வரும் காலங்களில் பழைய நினைவுகளை எண்ணி மகிழ்வேன். மகிழ்ச்சியான 2 ஆண்டுகளை கொடுத்த சிஎஸ்கே நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி" என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.