விளையாட்டு

215 ரன்களை சேஸிங் செய்து பங்களாதேஷ் சாதனை!

215 ரன்களை சேஸிங் செய்து பங்களாதேஷ் சாதனை!

webteam

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்  கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. 2-வது லீக்கில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது. நேற்று நடந்த 3-வது லீக்கில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதின. 

முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது. குசல் மென்டிஸ் 30 பந்துகளில் 57 ரன்களும் குசல் பெரேரா 48 பந்தில் 74 ரன்களும் குவித்தனர். தரங்கா 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். 

அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸ் 19 பந்துகளில் 43 ரன்களும் தமிம் இக்பால் 29 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து இமாலய இலக்கை எட்ட உதவினர். விக்கெட் கீப்பர் முஷ்பிஹுர் ரஹிம் 35 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். இதையடுத்து 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் சேஸிங் செய்த அதிகபட்ச இலக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.