விளையாட்டு

மன்ரோ மேஜிக்: வீழ்ந்தது விராத் டீம்!

webteam

இந்திய அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் காலின் மன்ரோ  அபாரமாக ஆடி, 54 பந்துகளில் சதமடித்தார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை இந்திய அணியிடம் இழந்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2 வது போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். காலின் மன்ரோ -மார்ட்டின் கப்தில் ஜோடி. 11.1 ஓவர்களில் 105 ரன்கள் குவித்தது. கப்தில் 45 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிக்சர்களாக விளாசிய மன்ரோ  54 பந்துகளில் சதமடித்தார். மன்ரோ 109 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 

அடுத்து களமிறங்கிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க போராடியது. இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் விராத் கோலி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். தோனி 49 ரன்கள் எடுத்தார். 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.