2024 சையத் முஷ்டாக் அலி டிராபி, கடந்த மாதம் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் டிசம்பர் 15 வரை நடைபெற இருக்கிறது. இத்தொடரில் 38 அணிகள் கலந்துகொண்டன. இந்த நிலையில், முதலாவது அரையிறுதியில் பரோடா அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, இன்று (டிச.13) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் ஜெயித்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த அந்த அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவாலிக் சர்மா 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ப்ரித்வி ஷா களமிறங்கினர். ப்ரித்வி ஷா 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ரகானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அதிரடியாக விளையாடிய ரகானே அரைசதம் விளாசினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் 46 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ரகானே 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரி, 5 சிக்சர் என 98 ரன்கள் விளாசினார். இறுதியில் மும்பை அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நடப்பு தொடரில் இதுவரை 8 இன்னிங்ஸ் விளையாடி 366 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளார் ரகானே. ஏற்கனவே 52(34), 68 (35), 95(34), 84 (55) நான்கு அரைசதம் விளாசியிருந்த நிலையில், இன்றைக்கு அடிக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் 6 அரைசதங்கள் அடித்து என்னையா ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை என்று பலருக்கும் கேட்கும் அளவிற்கு அதிரடி காட்டியிருக்கிறார்.