விளையாட்டு

அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்த மும்பை இண்டியன்ஸ்

kaleelrahman

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இண்டியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடர் அறிமுகமான போது மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடினார். எப்படி தோனி சென்னை அணியின் முகமாக பார்க்கப்பட்டாரோ அதேபோல் மும்பை அணியை முதலில் சச்சின் முகமாகவே அவரது ரசிகர்கள் பார்த்தனர். அவர் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஏலத்தில் அவர் மும்பை அணி நிர்வாகத்தால் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார்.

இடது கை மீடியம் பந்துவீச்சாளராகவும், இடது கை பேட்ஸ்மேனாக உள்ள அர்ஜூன் டெண்டுல்கரை பொறுத்தவரை மும்பை இண்டியன்ஸ் அணிக்காக நெட் பவுலராக சில வருடங்கள் இருந்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போதும் ஐக்கிய அமீரத்திற்கு அவர் அணியுடன் சென்றிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். ஆனால், பெரிய அளவில் அர்ஜூன் சோபிக்கவில்லை. ரன்களும் குவிக்கவில்லை. பந்துவீச்சிலும் ரன்களை வாரி வழங்கினார். அதனால், மும்பை அணிக்காக அவர் ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் குறைவே என்று கருதப்பட்டது. ஆனாலும், அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதனிடையேதான், சமீபத்தில் நடைபெற்ற கிளப் போட்டி ஒன்றில் 31 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அனைவரது கவனத்தையும் திருப்பி பார்க்க வைத்தார். அந்தப் போட்டிதான் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க காரணமாக அமைந்திருக்கும் என்று கூறலாம்.