விளையாட்டு

சொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி

சொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி

rajakannan

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தன. இதன் இறுதி போட்டிக்கு மும்பை, டெல்லி அணிகள் முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி பெங்களூரில் இன்று நடந்து வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் உன்முக்த் சந்தும் கவுதம் காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் கவுதம் காம்பீர். அடுத்து வந்த மனன் சர்மாவும் தேஷ்பாண்டே பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 5 ரன் எடுத்திருந்தார். 

பின்னர் துருவ் ஷோரியும் உன்முக்த் சந்தும் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். சந்த், 13 பந்தில் குல்கர்னி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து, ஷோரி, 31 ரன்னும் ராணா 13 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆக, ஹிம்மத் சிங் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார். அவர் அதிகப்பட்சமாக 41 ரன் எடுத்து, அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.

அடுத்து வந்தவர்கள் யாருமே நிலைத்து நிற்காததால், அந்த அணி 45.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சிவம் துபே, குல்கர்னி தலா 3 விக்கெட்டும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டும், முலானி ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

இதையடுத்து, 178 ரன்கள் என வெற்றி இலக்குடன் விளையாடிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பிரித்வி ஷா (8), ரகானே (10), ஷ்ரேயாஷ் (7), சூர்யகுமார் யாதவ் (4) என நம்பிக்கை நட்சத்திரங்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 40 ரன்கள் எடுப்பதற்கு மும்பை அணி 4 விக்கெட்களை பறிகொடுத்தது. 

இதனையடுத்து சித்தேஷ் லாட், விக்கெட் கீப்பர் ஆதித்யா டேர் இருவரும் பொறுப்புடன் விளையாடினார்கள். இதனால், மும்பையில் வெற்றி வாய்ப்பு மெல்ல மெல்ல பிரகாசித்தது. டேர் 89 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல், பொறுப்புடன் விளையாடிய லாட் இறுதியில் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து வெற்றி தொடரை கைப்பற்றியது. 71 ரன்கள் எடுத்த ஆதித்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.