விளையாட்டு

ஐபிஎல்-லில் அஸ்வின் கற்றுக்கொடுத்த தந்திரங்கள்: ஆப்கான் முஜிப் மிரட்டல்!

ஐபிஎல்-லில் அஸ்வின் கற்றுக்கொடுத்த தந்திரங்கள்: ஆப்கான் முஜிப் மிரட்டல்!

webteam

ஐபிஎல் கிரிகெட் போட்டியில் அஸ்வின் கற்றுக்கொடுத்த தந்திரங்களை, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்துவேன் என்று ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மான் சொன்னார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணி, தனது வரலாற்று சிறப்புமிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூருவில் வரும் 14-ம் தேதி நடக்கிறது. சிறப்பான ஸ்பின்னர்களை கொண்ட அந்த அணி, இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் விளையாடிய ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மான் கூறும்போது, ’பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினிடம் கற்ற தந்திரத்தை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்துவேன். ஐபிஎல் போட்டியின் போது அஸ்வினுடன் அதிக நேரத்தைச் செலவிட்டேன். அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், புதிய பந்தை எப்படி கையாள வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை அவர் கற்றுக்கொடுத்தார்.

(அஸ்வினுடன் முஜிபுர்)

முதல் தர போட்டியில் நான் விளையாடவில்லை என்றாலும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி இருக்கிறேன். இதனா ல் டெஸ்ட் போட்டி பற்றி எனக்கு பயம் இல்லை. கடுமையான நெருக்கடி நேரத்திலும் எப்படி விளையாட வேண்டும் என்பதை ஐபிஎல் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் எந்த அணிக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்பட முடியும். இந்திய கேப்டன் விராத் கோலி இந்தப் போட்டியில் விளையாட வில்லை என்றாலும் ரஹானே, கே.எல்.ராகுல் போன்ற திறமையான வீரர்கள்  விளையாடுகிறார்கள். அதனால் யாரை யும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம்’ என்றார்.