விளையாட்டு

"தோனி 4 ஆம் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும்" - கவுதம் காம்பீர்

jagadeesh

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக கேப்டன் தோனி 4 அல்லது 5 ஆவது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய கவுதம் காம்பீர் "தோனி எப்போதும் 4 அல்லது 5 ஆவது பேட்ஸ்மேனாகவே களமிறங்க விரும்புவார். ஆனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல்லில் 6 அல்லது 7 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அவருக்கு முன்னதாக சாம் கரணை களமிறக்கினார். அவர் அப்படி செய்யாமல் 4 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவதே அணிக்கு சரியானதாக இருக்கும். அப்படி முன் கூட்டியே இறங்கி விளையாடினால்தான் அணியினருக்கு ஓர் நம்பிக்கை வரும்" என்றார்.

மேலும் பேசிய அவர் "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பின்பு, ஐபிஎல்லில் மட்டுமே விளையாடுவது சற்று கடினமாகவே இருக்கும். ஐபிஎல் போட்டி சர்வதேச தரம் வாய்ந்தது. உலகின் டாப் பவுலர்கள் விளையாடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் அது அந்த அணிக்கு பலமாக இருக்கும்" என்றார் கவுதம் காம்பீர்.

முன்னதாக இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே அனைத்து வீரர்களும் அமீரகம் சென்றுவிட்டனர். அங்கு கட்டாய 6 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்பு வீரர்கள் தங்களது பயிற்சிகளை தொடங்கியிருக்கின்றனர்.