விளையாட்டு

கோபப்பட்ட ஹர்திக்; கூலாக டீல் செய்த தோனி- ‘தல‘ய பாத்து கத்துக்கணும்னு பாராட்டிய ரசிகர்கள்

கோபப்பட்ட ஹர்திக்; கூலாக டீல் செய்த தோனி- ‘தல‘ய பாத்து கத்துக்கணும்னு பாராட்டிய ரசிகர்கள்

சங்கீதா

சீனியர் வீரர் என்றும் பாராமல் முகமது ஷமியை, ஹர்திக் பாண்ட்யா திட்டியநிலையில், அதேபோன்றொரு சம்பவத்தில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் தோனி நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த சீசனில் யாரும் எதிர்பாராதவகையில், ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, குஜராத் அணிகள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

கடற்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், 5 முறை கோப்பை வென்ற மும்பை அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியும் தடுமாறி வருகின்றன. இந்நிலையில், என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தோனி போன்று தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஹர்திக் பாண்ட்யாவை ஒப்பிட்டு ரசிகர்கள் டவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த 21-வது லீக் ஆட்டத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. இந்த சீசனில் குஜராத் அணி முதல் முறையாக தோல்வியடைந்தது.

போட்டியின்போது, முதல் இன்னிங்ஸின் 13-வது ஓவரை கேப்டன் பாண்ட்யா வீசினார். அவர் வீசிய 2-வது மற்றும் 3-வது பந்தை வில்லியம்சன் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டார். இதனால் கடுப்பாகி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. இந்த தருணத்தில் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து, அதிரடியை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதியை ஆட்டமிழக்க செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

ஹர்திக் பாண்ட்யா வீசிய கடைசி பந்தை ராகுல் திரிபாதி அப்பர் கட் அடிக்க முயற்சித்தபோது, அது டீப் தேர்ட் மேனை நோக்கிப் பறந்து சென்றது. அந்த இடத்தில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும், மூத்த வீரருமான முகமது ஷமி நின்றிருந்தார். பந்தை பார்த்த அவர், அதை பிடிக்க ஒரு அடி பின்னோக்கி வந்து ஒன் பிட்ச் கேட்ச் பிடித்தார்.

ஆனால், ஷமி முயற்சித்து இருந்தால், முன்னோக்கி நகர்ந்து சென்று அந்த பந்தை கேட்ச் பிடித்து இருக்கலாம். பந்து பவுண்டரி போகக் கூடாது என நினைத்த அவர் அவ்வாறு செய்திருந்தார். ஷமி கேட்ச் பிடிக்க முயற்சி செய்யாததை பார்த்த ஹர்திக் பாண்ட்யா, மேலும் கடுப்பாகி முகம் சுழித்து கடிந்து கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யாவை ட்விட்டரில் திட்டி தீர்த்தனர்.

இதேபோன்றொரு சம்பவம் 22-வது லீக் ஆட்டமான நேற்றும் நடந்தது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணியின் முகேஷ் சவுத்திரி அடுத்தடுத்து கேட்ச்களை விட்டது பெரிய அளவில் சர்ச்சையானது. முதலில் பிரபுதேசாய் கொடுத்த கேட்சை முகேஷ் சவுத்திரி முதலில் பிடிக்காமல் விட்டார். அதன்பின் பிரபுதேசாய் அதிரடியாக ஆடினார். இதேபோல், தினேஷ் கார்த்திக் கொடுத்த எளிமையான கேட்சை முகேஷ் சவுத்திரி மீண்டும் தவறவிட்டார்.

அதன்பின் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் பின்னர் முகேஷ் சவுத்திரி ஓவரிலேயே இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 23 ரன்கள் சென்றது. நேற்று மொத்த சென்னை அணி ரசிகர்களும் முகேஷ் சவுத்திரியை விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தோனியோ முகத்தில் எந்த விதமான கோபத்தையும் காட்டாமல், அமைதியாக சென்று முகேஷின் தோளில் கைபோட்டுக்கொண்டு நண்பரைப் போல் அறிவுரை வழங்கினார்.

தோனியின் இந்த செயலைக் கண்ட ரசிகர்கள் இதுதான் தோனி என்று பாராட்ட துவங்கினர். குஜராத் - ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒரே ஒரு கேட்ச் விட்ட காரணத்திற்காக, முகமது ஷமியை மூத்த வீரர் என்றும் கூட பார்க்காமல் திட்டினார். ஆனால் தோனியோ இளம் வீரரை தட்டிக்கொடுத்து பாராட்டிய சம்பவம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.