விளையாட்டு

‘வீரர்கள் தவறு செய்யும்போது உங்களுக்கு கோபமே வராதா?’ - தோனி சொன்ன 'கூல்' பதில்!

JustinDurai

'நானும் மனிதன்தான். உங்களுக்குள் இருக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் இருக்கிறது' என்கிறார் எம்எஸ் தோனி.

'கூல் கேப்டன்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கூலாக இருப்பதே அதற்குக் காரணம். இந்நிலையில் அதற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார் தோனி.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் களத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது என எண்ணுவோம். அது மிஸ் ஃபீல்ட், கேட்ச் வாய்ப்பை நழுவ விடுவது அல்லது வேறு ஏதேனும் தவறு போன்றவற்றை சொல்லலாம். அப்படியும் வீரர்கள் களத்தில் ஏதேனும் தவறு செய்யும்போது அங்கு கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை. மைதானத்தில் 40 ஆயிரம் மக்கள் போட்டியை பார்த்து கொண்டிருக்கிறார்கள். டிவி போன்ற மீடியா வழியே கோடான கோடி பேரும் பார்த்து வருகின்றனர். நான் எப்போதும் அந்த வீரர் ஏன் தவறு செய்தார். அதற்கான காரணம் என்ன என்பதை அவரது கண்ணோட்டத்தில் நின்று பார்ப்பேன்.

அந்த வீரர் 100 சதவீதம் அந்த கேட்ச்சை பிடிக்க முயன்று, அதைத் தவறவிட்டிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அதே நேரத்தில் பயிற்சியின்போது அவர் எத்தனை கேட்ச் பிடித்தார் என்பதையும் கருத்தில் கொள்வேன். அவருக்கு அதில் ஏதேனும் சிக்கல் இருந்து, அதற்கு தீர்வு காண நினைதால் ஓகே. நான் எப்போதும் இந்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவேன். அந்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்த காரணத்தால் ஆட்டத்தை இழந்திருந்தாலும் நான் இதைத்தான் பார்ப்பேன்.

நானும் மனிதன்தான். உங்களுக்குள் இருக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் இருக்கிறது. நாம் நமது நாட்டுக்காக விளையாடுகிறோம். அதனால், சில நேரங்களில் அந்தத் தவறுகள் மோசமானதாக இருக்கும். என்ன, அதை நான் வெளிக்காட்டாமல் இருப்பேன். நாம் எப்படி நமது நாட்டுக்காக விளையாடுகிறோமா அதுபோல தான் எதிரணி வீரர்களும்” என தோனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”2-3 தோல்விகளைப் பற்றி கவலை வேண்டாம்; மீண்டு வாருங்கள்” - கங்குலி நம்பிக்கை