விளையாட்டு

"தோனிக்கு மாற்றாக வந்தவர் தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்"- சாடிய நெஹ்ரா !

"தோனிக்கு மாற்றாக வந்தவர் தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்"- சாடிய நெஹ்ரா !

jagadeesh

தோனிக்கு மாற்றாக நினைத்து இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்ட ரிஷப் பன்ட் இப்போது மற்ற வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தேர்வாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார், அதைப் பொருத்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அண்மையில் பேசிய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனியின் எதிர்காலம் மற்றும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அதில் " நான் ஒரு விஷயத்தில் மிக மிக தெளிவாக இருக்கிறேன். உலகக் கோப்பை முடிந்தவுடன் தோனியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர்தான் கிரிக்கெட்டிலிருந்து தான் கொஞ்சநாள் ஒதுங்கியிருக்க நினைப்பதாக கூறினார். இதனையடுத்துதான் ரிஷப் பன்ட்டை அணியில் சேர்த்தோம், இப்போதும் அவரை அணியில் வைத்துள்ளோம்" என்றார் அவர்.

இப்போது ஆசிஷ் நெஹ்ராவும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் முன்னாள் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ராவுடன் உரையாற்றிய நெஹ்ரா தனது மனதில் தோன்றிய விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார், அதில் "திறமையான வீரர்களுக்கு நிறைய ஆதரவு தேவைப்படுகிறது. இப்போது கூட இந்திய அணியின் 5,6 ஆவது இடங்களில் விளையாட வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இப்போது கேஎல் ராகுல் 5ஆவது இடத்தில் களமிறங்குகிறார். ஆனால் 5 ஆம் இடத்தில் தோனிக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ரிஷப் பன்ட் சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் சேவையை செய்து வருகிறார்" என்றார் காட்டமாக.

மேலும் தொடர்ந்த நெஹ்ரா "ரிஷப் பன்ட் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் அவரை அணியில் வைத்திருப்பது எதற்காக, அவரின் திறமைகளை 22 வயதிலேயே கண்டுக்கொண்டதால்தானே " என கூறியுள்ளார்.