விளையாட்டு

விஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்?

விஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்?

webteam

விஜய் ஹசாரே போட்டியில் தோனி விளையாடாதது ஏன் என்று ஜார்கண்ட் பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் மும்பை, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, ஐதராபாத், ஹரியானா, ஜார்கண்ட், பீகார் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு முன்னேறின.

பெங்களூருவில் இன்று காலை நடக்கும் முதலாவது கால் இறுதியில் மும்பை–பீகார் அணிகள் மோதுகின்றன. மும்பை அணிக்காக ரோகித் சர்மா ஆடுகிறார். மற்றொரு கால் இறுதியில் டெல்லி–ஹரியானா அணிகள் மோதுகின்றன.

இந்த கால் இறுதி போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே ஃபார்மில் இல்லாத தோனி, இந்த போட்டிகளில் விளையாடி பயிற்சி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் விளையாட தோனி மறுத்துவிட்டார்.

இதுபற்றி  ஜார்க்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் கூறும்போது, ‘ஜார்கண்ட் அணி இதுவரை சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திடீரென்று அணிக்குள் வந்து அதன் சமநிலையை குலைக்க வேண்டாம் என்று தோனி விரும்புகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் விஷயமாக வரும் 16ஆம் தேதி ஐதராபாத் செல்கிறார் தோனி. ஜார்கண்ட் அணிக்காக அவர் ஆட வரலாம். அது அவரது முடிவு’ என்றார்.

ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கடந்த வாரம் அளித்த பேட்டியில், ’விஜய் ஹசாரே போட்டியின் நாக் அவுட் போட்டிகளில் தோனி பங்கேற்பார்’ என்று கூறியிருந்தார்.