நாக்பூரில் நடைபெற்ற சம்பவம் போலவே சென்னையிலும் ரசிகருடன் தோனி ஓடிப் பிடித்து விளையாடிய வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் தோனி. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக இவர் விளையாடுவதால், தமிழகத்தில் இவருக்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரும் 'சென்னை என் இரண்டாவது வீடு' என்று கூறி தனது பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தோனியின் மீதுள்ள பாசத்தில் ரசிகர்கள் பலமுறை மைதானத்திற்குள்ளே நுழைந்து அவரது காலை தொட்டு வணங்கி சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற போட்டியின் போது ரசிகர் ஒருவர் தோனியை கட்டிப்பிடிக்க மைதானத்துக்குள் ஓடிவர ரோகித் சர்மாவுக்குப் பின்னால் தோனி ஒளிந்து கொண்டார். ரசிகர் துரத்த பிடிகொடுக்காமல் தோனி ஓட, அந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் அதேபோல் ஒரு சம்பவம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. சிஎஸ்கே கேப்டனான தோனி ஐபிஎல் போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர் தோனியை தொட முயன்றார். பாலாஜிக்கு பின்னால் ஒளிந்துகொண்ட தோனி, பிடிகொடுக்காமல் ஓடத்தொடங்கினார்.
ரசிகரும் துரத்திக்கொண்டு ஓட பாதுகாவலர்களும் சேர்ந்து ஓடிக்கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் தோனி அந்த ரசிகருக்கு கைகொடுத்து அனைவரின் ஓட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ''எல்லாரையும் ஓட விடுவதே தல தோனிக்கு வேலையா போச்சு'' என அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.