2011 உலகக்கோப்பையில் தோனியின் அந்த பினிஷிங் சிக்ஸரை நினைவுகூரும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு இருக்கைக்கு தோனியின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை எவராலும் மறக்க முடியாது. 1983-க்கு பின், கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியது தோனி தலைமையிலான இந்திய அணி.
இறுதிப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை, இந்தியா அபாரமாக சேஸிங் செய்தது. கடைசி வெற்றி ரன்களை சிக்ஸர் மூலம் எடுத்தார் தோனி. அது ரசிகர்களால் மறக்க முடியாத சிக்ஸர்.
இந்நிலையில் 39 வயதான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், தோனியின் அந்த பினிஷிங் சிக்ஸர் தரையிறங்கிய மும்பை வான்கடே மைதானத்தின் ஒரு இருக்கைக்கு தோனியின் பெயரை சூட்ட முடிவு செய்யப்படுள்ளது.
இதுதொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் அப்பெக்ஸ் கவுன்சில் உறுப்பினர் அஜிங்க்ய நாயக், நேற்று இந்த திட்டத்துடன் எம்.சி.ஏ.க்கு பரிந்துரை கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் மகத்தான பங்களிப்புக்கு நன்றி மற்றும் மரியாதை செலுத்தும் செயலாக, அவரது பெயரில் ஒரு நிரந்தர இருக்கையை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, வான்கடே ஸ்டேடியம் ஒரு சில பகுதிகளை முன்னாள் வீரர்களுக்காக அர்ப்பணித்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட், சுனில் கவாஸ்கர் ஸ்டாண்ட், விஜய் மெர்ச்சண்ட் ஸ்டாண்ட் ஆகியவை உள்ளன. பாலி உம்ரிகர் கேட் மற்றும் வினூ மங்கட் கேட் ஆகியவையும் உள்ளன.
அந்த வரிசையில் விரைவில், எம்.எஸ்.தோனி இருக்கையும் வரவிருக்கலாம் என கூறப்படுகிறது.