இலங்கைக்கு எதிரான இந்தியாவின் 4-வது போட்டியானது, மகேந்திர சிங் தோனியின் 300-வது ஒருநாள் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்தியா வெற்றிகரமாக விளையாடி வருகிறது. அதன்படி 3-0 என்ற தொடர் வெற்றிகள் மூலம் கோப்பையை வசப்படுத்தியுள்ள இந்தியா, நாளை 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியுடன் தனது 300-வது ஒருநாள் போட்டியை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நிறைவு செய்கிறார். இதனால் இந்த போட்டியில் அனைவரது பார்வையும் தோனியின் மீது இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக காணப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில், 300-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நிறைவு செய்யும் 6-வது வீரராக தோனி திகழ்கிறார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளிலும், ராகுல் ட்ராவிட் 344, அசாருதீன் 334, கங்குலி 311, யுவராஜ் சிங் 304 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இவர்களை தொடர்ந்து 300-வது போட்டியை நிறைவு செய்யும் தோனி, இதுவரை 9,608 ரன்கள், 10 சதங்கள் மற்றும் 65 அரைசதங்களை அடித்துள்ளார். அத்துடன் 736 பவுண்டரிகளையும் 209 சிக்சர்களையும் விளாசியுள்ள தோனி, கீப்பராக இருந்து 278 கேட்ச்களையும், 99 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் நாளை விளையாடவுள்ள 300-வது ஒருநாள் போட்டியில் 100-வது ஸ்டம்பிங்கை தோனி கைப்பற்றுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகளில், இரண்டு போட்டிகளின் வெற்றியில் தோனி முக்கிய பங்கு வகித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் 2019 உலகக்கோப்பை மனதில் கொண்டே தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.