தோனி பாட்டு பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனியை, அதற்கு பின் எந்தப் போட்டியிலும் ரசிகர்கள் பார்க்கவில்லை. இதற்கிடையே தோனியின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டன.
இந்த சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
கிரிக்கெட் போட்டியில் பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது தோனி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கிறது. இந்நிலையில் தோனி பாட்டு பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. பியூஷ் சாவ்லா, பார்த்திவ் படேல் ஆகியோருடன் சேர்ந்து பாத்ரூமில் அமர்ந்துகொண்டு பாட்டு பாடுகிறார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மார்ச் 1-ம் தேதி தோனி, சென்னைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இரண்டு வாரங்களாவது தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.