விளையாட்டு

"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்"- சீனிவாசன்

jagadeesh

தோனியும் சிஎஸ்கே அணியும் வெற்றிக்காக வெறித்தனமாக காத்திருந்தார்கள் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சூதாட்டப் புகார் குற்றச்சாட்டின் காரணமாக சிஎஸ்கே அணிக்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. பின்பு சிஎஸ்கே அணி 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது. அந்தாண்டு ஐபிஎல் கோப்பையையும் சிஎஸ்கே வென்று சாதித்தது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய சீனிவாசன் பல்வேறு தகவல்களை பகிர்ந்தார் அதில் "பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் தோனியும், சிஎஸ்கேவும் இதனை திறம்பட கையாண்டனர். தடைக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக வெறித்தனமாக காத்திருந்தோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த சீனிவாசன் "அப்போது எனக்கும் சிஎஸ்கே அணிக்கும் ஒரே நேரத்தில் சிக்கல் வந்தது. ஆனால் எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் இருந்தது. அது எதிர்த்து நின்று போராடுவது. அந்த சமயம் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைப்பது போல உணர்ந்தேன். அப்போது காவல்துறை உயர் அதிகாரி என்னை தொடர்புக் கொண்டு நீங்கள் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தால் உங்களுக்கு ஒரு பிரச்னை வராது என்றார். ஆனால் அதன் பின்பு பொறுத்திருந்து எல்லா முடிவையும் எடுத்தேன்" என்றார் அவர்.