விளையாட்டு

இந்தப் பக்கம் ரிலையன்ஸ்... அந்தப்பக்கம் அதானி: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பெயர் மாற்றம்

இந்தப் பக்கம் ரிலையன்ஸ்... அந்தப்பக்கம் அதானி: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பெயர் மாற்றம்

jagadeesh

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என இன்று பெயர் மாற்றப்பட்டது. மேலும் பிட்சின் இரு முனைகளின் என்ட் (End) பெயரும் ரிலையன்ஸ் மற்றும் அதானி பெயர்கள் வைக்கப்பட்டன.

புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்று வருகிறது. இந்த ஸ்டேடியத்தை, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது. உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நிலையில், அந்த பெயரை இனி, சர்தார் படேல் மைதானம் பெற்று இருந்தது.

இந்த நிலையில், சர்தார் படேல் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த அரங்கம், நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிட்சின் இரு முனைக்கும் ரிலையன்ஸ் என்ட் (Reliance End) மற்றும் அதானி என்ட் (Adhani End) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயரை தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.