விளையாட்டு

தோனியின் சாதனையை முறியடித்த இயான் மார்கன் !

jagadeesh

கேப்டன்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து - அயர்லநாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று சவுதாம்ப்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் இயான் மோர்கன் (106 ரன், 84 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) சதமும், டாம் பான்டன் (58 ரன்), டேவிட் வில்லி (51 ரன்) அரைசதமும் அடித்தனர்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் விளாசியவர் என்ற தோனியின் (322 ஆட்டத்தில் 211 சிக்சர்) சாதனையை மார்கன் நேற்று முறியடித்தார். கேப்டன்களில் மோர்கனின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 215 ஆக (163 ஆட்டம்) உயர்ந்துள்ளது. இந்தப் போட்டியில் 329 ரன் என்ற இலக்கை நோக்கி ஆட தொடங்கிய அயர்லாந்து அணி கடைசி ஓவரில் வெற்றிப் பெற்றது. ஆனாலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.