விளையாட்டு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி திடீர் கைது

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் வீட்டுக்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் மனைவி ஹசின் ஜஹான் கைது செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரு கிறார். இவர் மனைவி ஹசின் ஜஹான். இவர், ஷமி மீது சரமாரி புகார்களை கூறியிருந்தார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் செய்திருந்தார். முகமது ஷமி தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். 

முகமது ஷமியின் குடும்பத்தினர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹாவை அடுத்துள்ள அலிபுர் கிராமத்தில் வசிக்கின்றனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமது ஷமியின் மனைவி ஹசின் தனது குழந்தையுடன் சென்றார். ஷமியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டுக்குள் நுழைந்தார். இதையடுத்து ஷமியின் அம்மா போலீசில் புகார் செய்தார். போலீசார், ஹசினை சமாதானப்படுத்தினர். முடியவில்லை. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹசின் ஜஹான், ‘எனது கணவர் வீட்டில் நுழைய எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் எப்போது இங்கு வந்தாலும் என் மாமியார் என்னிடம் பிரச்னை செய்வதிலேயே குறியாக இருக்கிறார். போலீசாரும் அவர்களுக்குத்தான் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை கைது செய்வதற்கு பதிலாக, என்னை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர்’’ என்றார்.