அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் புதிய அணி ஒன்று சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், அதனை வாங்க பிரபலங்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஐபிஎல் போட்டிகளில் உருவாகவுள்ள 9-வது அணியை மலையாள நடிகர் மோகன்லால் வாங்க ஆர்வத்துடன் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. அவர், துபாயில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் சென்று பார்த்து ரசித்த பின் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம், சல்மான் கான் தரப்பில் ஆர்வம் காட்டப்பட்டு வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடர் 10 அணிகளை வைத்து நடத்தப்பட்டது. கொச்சி டஸ்கர்ஸ், குஜராத் லயன்ஸ் போன்ற அணிகள் 8 அணிகளாக குறைக்கப்பட்டபோது விலக்கிகொள்ளப்பட்டது. அதிலும், கொச்சி டஸ்கர்ஸ் அணி பங்குதாரர்கள் பிரச்சனையால் விலகிக்கொண்டது. இதனால் 9வது அணி கொண்டுவரப்பட்டால், இந்த இரண்டு அணிகளில் எதாவது ஒன்று மீண்டும் உதயமாகும் என தெரிவிக்கிறார்கள்.
அதிலும், குஜராத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் தயாராகி வருகிறது. இந்த மைதானத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அகமதாபாத்தைத் தலைமையாகக் கொண்டு ஓர் அணிவர அதிக வாய்ப்பு உண்டு என்கிறார்கள் பிசிசிஐ வட்டார நபர்கள்.
பிசிசிஐ சம்மதிக்குமா?!
இவை அனைத்தும் யூகங்கள்தான். ஆனால், உண்மை நிலவரம் என்னவென்பது பிசிசிஐக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை சல்மான் கான் போன்றார் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அதற்கு பிசிசிஐ சம்மதிக்குமா என்றால், சம்மதிக்கும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் பதிலாக இருக்கிறது. அதற்கான காரணங்களையும் அடுக்கிறார்கள் அவர்கள்.
"கொரோனா தொற்று காரணமாக 13வது ஐபிஎல் தொடர் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொடரால் பெரிய அளவில் பிசிசிஐக்கு வருமானம் இல்லை. செலவுகள்தான் அதிகம். வருமானக் குறைவு, விளம்பரதாரர்களிடம் இழப்பு என நடந்து முடிந்த ஐபிஎல் தொடரால் பிசிசிஐ இழந்தது அதிகம்.
அதனை ஈடுகட்ட வேண்டும் என்றால் புதிய அணிகளை சேர்க்க அதிகவாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே, அடுத்த ஏப்ரல் - மே மாதத்தில் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக அறிவித்து இருந்தார். அதற்கான ஆரம்ப கால பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது. இதனால், புதிய அணியை சேர்ப்பது குறித்து விரைவில் ஆலோசனை செய்யப்படும். பெரும்பாலும் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் புதிய அணி குறித்த அறிவிப்பும், வீரர்களின் மிகப்பெரிய ஏலமும் நடக்கும்" என்று பிசிசிஐ தரப்பு நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போட்டா போட்டியில் பிரபலங்கள்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா அணியை தனது சக கலைஞர் ஜூஹி சாவ்லா உடன் இணைந்து நடத்தி வருகிறார். இதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஓனராக நடிகை ப்ரீத்தி ஜிந்தா இருக்கிறார், தற்போது இந்த வரிசையில் மோகன்லாலும், சல்மான் கானும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் ஐபிஎல் அணி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
மோகன்லால் பைஜூஸ் கல்வி ஆப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஐபிஎல் அணியை வாங்க மும்முரம் காட்டி வருகிறார் என்றும், அதன் ஏற்பாடாகவே துபாயில் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார் என்றும் கூறப்படுகிறது. நடிகர்கள் மட்டுமல்ல, டாடா நிறுவனம், அதானி குழுமம் போன்ற இந்தியாவின் பெரும் நிறுவனங்களும் இந்த ரேஸில் இருக்கின்றன. இதனால், அடுத்த ஆண்டு எப்படியும் புதிய அணி வரும் என அடித்து கூறுகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.