முகமது சிராஜின் தந்தை இருந்திருந்தால் இந்நேரம் பெருமையாக உணர்ந்திருப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீராங்கணை இசா குஹா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் காபாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி 73 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து சிராஜூக்கு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முகமது சிராஜின் தந்தை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது காலமானார். தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட சிராஜால் செல்ல முடியவில்லை.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் "டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு அபாரமான மன உறுதியிருந்தது, பின்பு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதே தொடரில் 5 விக்கெட்டை வீழ்த்தியது அபார சாதனை. அதற்கு தலை வணங்குகிறேன். இப்போது உங்களது தந்தை பெருமையாக உணர்வார், அவர் மேலிருந்து உன் சாதனையை பார்த்துக்கொண்டு இருப்பார்" என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கணை இசா குஹா "முகமது சிராஜுக்கு மிக முக்கியமான தருணம். அவருக்கு இந்த சாதனை தேவையானதுதான். கடந்த சில மாதங்களாக அவர் அடைந்த துன்பம் விவரிக்க முடியாதது. அவரின் தந்தை இப்போது இருந்திருந்தால் நிச்சயம் பெருமையாக உணர்ந்திருப்பார். அவருக்கு சக வீரர்களும் உற்சாகம் அளிக்கின்றனர்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.