விளையாட்டு

'டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பில்லை' - ஆஷிஷ் நெஹ்ரா

JustinDurai

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகம்மது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி, கடைசியாக சென்ற வருடம் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். அதன்பின்னர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இதனிடையே ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முகம்மது ஷமி இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள  டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகம்மது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். முகம்மது ஷமிக்கான வாய்ப்பு குறித்துப் பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, ''இப்போதைக்கு முகம்மது ஷமி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஆனால் அவரது திறமைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடாவிட்டாலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரை தேர்வுசெய்ய தேர்வுக்குழு நிச்சயமாக பரிசீலிக்கும். இந்த ஆண்டில் நமக்கு அதிகமான ஒருநாள் போட்டிகள் இல்லை. ஐபிஎல் முடிந்தவுடன் ஷமி ஓய்வில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் முகம்மது ஷமி இடம்பெற வாய்ப்புள்ளது'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: தொடரை வெல்லப்போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா?- பெங்களூரில் 'ட்விஸ்ட் ' வைக்குமா மழை?