இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது மனைவி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல் சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ட்ரோல் ஆகி வருகிறது.
இந்திய அணிக்காக 2000-06 ஆண்டுகளில் விளையாடியவர் கைஃப். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த பீல்டராகவும் விளங்கினார். 2006-ல் ஓய்வு பெற்றப் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமூக வலைதளங்களில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பல பதிவுகளை கைஃப் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், முகமது கைஃப் தனது மனைவி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போன்ற படத்தை ட்விட்டரில் நேற்று பதிவிட்டார். “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..! அன்பும் வாழ்த்தும் பெருகட்டும்” என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து கைஃப் வெளியிட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் ட்ரோல் ஆகி வருகிறது. கைஃப் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பலரும் விமர்சித்தனர். இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவதற்கு மரணிக்கலாம் என்னும் அளவிற்கு இந்த விமர்சனம் சென்றது.
சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு கைஃப் சர்ச்சைக்குள்ளாவது இது முதல்முறை அல்ல. முகமது கைஃப் தனது மகனுடன் செஸ் விளையாடுவது போன்று ஒரு புகைப்படத்தை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். அப்போது செஸ் இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதனையடுத்து, ‘எதிரானதா? மூச்சுவிடறது எதிரானதா இல்லையான்னு கேட்டுச் சொல்லுங்க?’ என்று கிண்டலாக எதிர்வினை ஆற்றினார். அதேபோல் கைஃப் சூரிய நமஸ்காரம் செய்வது போன்று படங்களை வெளியிட்டதும் சர்ச்சையானது.
இதேபோல், இர்பாஃன் பதான் ராக்கி கட்டியது போன்ற படமும், அவரது மனைவி நெயில் பாலிஷ் போட்டு கொண்டது போன்ற படமும் சர்ச்சைக்குள்ளானது.