விளையாட்டு

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டி - புதிய சாதனை படைக்கப் போகும் மிதாலி ராஜ்

சங்கீதா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைக்க உள்ளார்.

ஐசிசியின் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டி நியூசிலாந்தில் கடந்த 4-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் கடந்த 6-ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, ஹாமில்டனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46.4 ஓவர்களில் 198 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம், மகளிர் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்துள்ளார்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில், உலக அளவில், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை படைத்து முதலிடத்துக்கு வரவுள்ளார் மிதாலி ராஜ். இதன்மூலம் பெலின்டா கிளார்க்கின் சாதனையை, 39 வயதான மிதாலி ராஜ் முறியடிக்க உள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம், மிதாலி ராஜ் ஆறு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும், உலகளவில் 6 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இரண்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாவித் மியாண்டட் உடனான சாதனைப் பட்டியலில், தன்னையும் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.