விளையாட்டு

'இளம் வீராங்கனைகளுக்கு மகளிர் ஐபிஎல் ஒரு வரப்பிரசாதம்' - மிதாலி ராஜ் நம்பிக்கை

JustinDurai

மகளிர் ஐபிஎல் இந்தியாவில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு நிலையான வாய்ப்பை தந்துள்ளது என்கிறார் மிதாலி ராஜ்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே மகளிருக்கான ஐபிஎல் தொடர் இந்தாண்டு முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது.  இதற்கான வீராங்கனைகள் ஏலம் நடந்து முடிந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன. இதில் குஜராத் அணியின் வழிகாட்டியாக வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளார்.

இந்நிலையில் மகளிர் ஐபிஎல் தொடர் மிதாலி ராஜ் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''ஏலத்தில் முதன்முறையாக பங்கேற்பது நல்லதொரு அனுபவமாக அமைந்தது. ஏலம் எப்படி நடக்கிறது என்பது பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். உண்மையில் ஆண்கள் ஐபிஎல்லில் ஏலம் எப்படி நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. ஒரு அணியை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை கற்பதற்கே ஒன்றரை வாரமாகிவிட்டது.  

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் லீக் பற்றி நிறைய பேசப்பட்டது. இறுதியாக இந்த ஆண்டு அது நடக்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் ஒரு பெரிய பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இம்முறை வீராங்கனையாக அல்ல, ஒரு வழிகாட்டியாக. மகளிர் ஐபிஎல் இந்தியாவில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு ஒரு நிலையான வாய்ப்பை தந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மகளிர் ஐபிஎல் இளம் வீராங்கனைகளுக்கு  ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, இன்னும் சில வருடங்களில் வெளிநாட்டில் உள்ள கிளப் கிரிக்கெட் வீராங்கனைகள் கூட, இதுபோன்ற அமைப்பில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்கள். கடந்த காலங்களில், இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தங்களுக்கு இல்லை என்று கருதி, பலர் குறுகிய காலத்திலேயே கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார். அப்படியான நிலை இனி மாறும். பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்ய தென்னாப்பிரிக்காவிற்கு நான் செல்லவிருக்கிறேன். அதன்பிறகு ஐபிஎல் அணிக்காக முழு நேரத்தை செலவழிப்பேன்'' என்றுள்ளார்.