ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி ஆடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியுள்ளது. அதன் முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இங்கிலாந்தின் கவுண்டி போட்டியில் பங்கேற்று பயிற்சி பெற இருப்பதால், இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ‘விராத் கோலியின் முடிவு ஆச்சரியமாக இருக்கிறது. நாட்டுக்காக டெஸ்ட் போட்டியில் ஆடுவதுதான் முக்கியம். டெஸ்ட் போட்டி, டெஸ்ட் போட்டிதான். யாருடன் விளையாடுகிறோம் என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை. டெஸ்ட் போட்டிதான் நமது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கவுண்டி கிரிக்கெட்டில் கொஞ்சம் கால இடைவெளி கிடைத்தாலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு அங்கு செல்ல வேண்டும். எனது கேரியரில் நான் நாட்டுக்காகத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். அதற்காக மற்ற போட்டிகளில் விளையாடும் பல வாய்ப்புகளை விட்டிருக்கிறேன். நாட்டுக்காக ஆடுகிறீர்கள் என்பதுதான் மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பானது. கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவது விராத் கோலியின் தாகத்தை உணர்த்துகிறது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் பங்கேற்கிறார் என்பதையும் மறுக்கவில்லை’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக ஆடவில்லை என்றாலும் விராத் கோலி நன்றாக விளையாடி இருக்கிறார். அவர் 10 போட்டிகளில் 396 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. இந்திய உலகக்கோப்பை அணியில் தோனி முக்கிய அங்கம் வகிப்பார் என்று கருதுகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இளமையும் அனுபவமும் கலந்த அணியாக இந்தியா விளங்குகிறது’ என்றார்.