விளையாட்டு

“தோல்விக்கு புதிய ஆரஞ்சு ஜெர்ஸிதான் காரணம்” - மெகபூபா முஃப்தி

webteam

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் தோல்விக்கு புதிய ஆரஞ்சு ஜெர்ஸிதான் காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து, 31  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணி உலகக் கோப்பையில் தோற்றதற்கு புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியே காரணம்” எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக இந்திய அணி இந்தப் போட்டிக்கு வழக்கமாக அணியும் நீல நிற ஜெர்ஸிக்குப் பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து விளையாடியது. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் ஜெர்ஸியும் நீல நிறத்தில் இருந்ததால் இந்திய அணி புதிய நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.