இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிதாக அதிக எடை கொண்ட வீரர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது.
இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடரை தொடர்ந்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது பெயர் ராஹீம் கார்ன்வால். இவர் சற்று வித்தியாசமான ஒரு கிரிக்கெட் வீரர். ஏனென்றால் இவரது உயரம் 6.6 அடி. இவரது எடை 140 கிலோ ஆகும்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற சாதனையை இவர் படைப்பார். இவர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 55 முதல் தர போட்டியில் விளையாடி 2,224 ரன்களை எடுத்துள்ளார். அத்துடன் 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் இவர் 2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டூர் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி, புஜாரா, ராஹனே ஆகியோரை வீழ்த்தியுள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள இந்திய அணிக்கு எதிராக இம்முறை விளையாடுவது சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.