விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் விளையாடாத மயங்க் உலகக்கோப்பையில் சேர்க்கப்பட காரணம் என்ன?

ஒருநாள் போட்டிகளில் விளையாடாத மயங்க் உலகக்கோப்பையில் சேர்க்கப்பட காரணம் என்ன?

webteam

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கு பதிலாக கர்நாடக தொடக்க ஆட்ட வீரரான மயங்க் அகர்வால் இடம் பிடித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத இவர், இந்திய அணிக்கு தேர்வு செய்ய காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கு மாற்று வீரராக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, நடுவரிசையில் அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடு ஆகியோரை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இந்திய தேர்வு குழு அவர்களை விட்டு இறுதியில் மயங்க் அகர்வாலை தேர்வு செய்தது. அதற்கு முக்கிய காரணம் கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்திய ஏ அணிக்கு விளையாடிய அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

4 போட்டிகளில் 287 ரன்கள் குவித்தார். 75 உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 14 சதம், 12 அரைசதம் உட்பட 48.71 சராசரியுடன் 3 ஆயிரத்து 605 ரன்கள் விளாசியுள்ளார். இவ்வாறு உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்த மயங்க அகர்வால் கடந்தாண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. 2 போட்டிகளில் 195 ரன்கள் அடித்து, 65 சராசரியை ஆஸ்திரேலியா மண்ணில் பதிவு செய்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அண்மையில் நடந்த ஐ.பி.எல் தொடரிலும் பஞ்சாப் அணிக்கு 13 போட்டிகளில் 332 ரன்களை அடித்து அசத்தினார். இதெல்லாம் தான் கிரிக்கெட்டின் மாபெரும் களம், அனைத்து வீரர்களின் கனவான இருக்கும் உலகக்கோப்பை தொடரில் அவருக்கான இடத்தை பெற்றுத் தந்துள்ளது. பெரும்பாலும் இவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டு, கே.எல் ராகுல் மீண்டும் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களம்  இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.