காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து தமிழக வீரர் விஜய்சங்கர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் விஜய்சங்கர் இடம்பிடித்திருந்தார். இருப்பினும், தொடக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக ஷிகார் தவானுக்கு ஓய்வு அளிக்கப்படவே, விஜய்சங்கர் ஆடும் லெவனின் விளையாடினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக அவர் விளையாடினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மற்ற போட்டியில் அவர் பந்துவீசவில்லை. அதேபோல், பேட்டிங்கிலும் பெரிதாக தாக்கத்தை செலுத்தவில்லை. மொத்தமே 58 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனிடையே, காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் இருந்தும் விஜய் சங்கர் விலகினார். அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.
யார் இந்த மயங்க் அகர்வால் ?
கடந்தாண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அந்தத் தொடரில் ப்ரித்வி ஷா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றார்.
முதல்தரப் போட்டியில் மிகவும் சிறப்பான பேட்டிங் செய்து வந்த மயங்க் அகர்வால், தற்போது சர்வதேச போட்டிகளில் கடத்தாண்டு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்.
கடைசியாக அகர்வால் விளையாடிய 15 முதல் தரப்போட்டிகளில் 1516 ரன்கள் குவித்து இருந்தார். அதிகபட்சமாக 302 ரன்கள் சேர்த்துள்ளார்.2010 முதல் டி20 போட்டிகளிலும், 2013 முதன்முதல் தரப் போட்டிகளிலும் அவர் விளையாடி வருகின்றார். கடைசியாக ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக டி20 போட்டியில் விளையாடியுள்ளார். இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில், மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் கர்நாடக அணி, முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. மயங்க் அகர்வால் 57 பந்துகளில் 85 ரன் எடுத்தார்.
தன்னுடைய முதல் சர்வதேசப் போட்டியை விளையாட அகர்வால் 27 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது உலகக் கோப்பையில் ஆடும் லெவன் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டால் நிச்சயம் பிரமாதமாக விளையாடுவார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து, பிசிசிஐயின் இந்த முடிவை பாராட்டி வருகின்றனர்.