இந்தியா -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, டெல்லியில் திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதால், இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே, ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக்கும் டி-20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர், காற்று மாசு பற்றி கூறும்போது, ’டெல்லியில் கிரிக்கெட் போட்டியைவிட காற்று மாசுதான் தீவிர பிரச்னையாக இருக்கிறது. டெல்லியில் வசிப்பவர்கள் விளையாட்டை விட, இதைத் தான் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதனால் இந்தியா -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடக்குமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டபோது, ’ திட்டமிட்டபடி, போட்டி டெல்லியில் நடக்கும்’ என்றார்.