உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இங்கிலாந்திலுள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் வேகத்தில் அடுத்தடுத்து சரிந்தனர். ஒவரால் கூட அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எந்த வீரரும் 30 ரன்களை கூட கடக்கவில்லை. அதிகபட்சமாக, பகார் ஜமான், அசாம் தலா 22 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட் சாய்த்தார். அதேபோல், ஹோல்டர் 3, ரஸல் 2 விக்கெட்டை எடுத்தனர். ரஸல் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் சாய்த்தார். 106 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், ஹோப் களமிறங்கினர். ஹோப் 11 ரன்னிலும், பிராவோ ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், கெயில் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அரைசதம் அடித்த அவர் 34 பந்தில் 50 ரன் எடுத்து அவுட் ஆனார். கெயில் ஆட்டமிழந்தாலும், அவரது அதிரடியை நிகோலஸ் பூரான் கையிலெடுத்தார். அவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. பூரான் 19 பந்துகளில் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹெட்மயர் 7 ரன்னுடம் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் மூன்று விக்கெட்டையும் சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியுடன் தொடரை தொடங்கியுள்ளது.