விளையாட்டு

35 பந்தில் சதம் விளாசிய குப்தில் - அதிவேக அரைசதம் அடித்து அசத்தல்

rajakannan

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார். டி-20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் சதம் என்ற சாதனையில் 4வது இடத்தைப் பிடித்தார். 

இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையேயான டுவென்டி20 பிளாஸ்ட் என்ற டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாரத்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிராக வோர்செஸ்டர்ஷைர் அணி விளையாடியது. இதில், வோர்செஸ்டர்ஷைர் அணியில் குப்தில் விளாடினார். இந்தப் போட்டியில் குப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதில், 35 பந்துகளில் சதம் விளாசினார். 20 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

முதலில் விளையாடிய நாரத்தாம்ப்டன்ஷைர் அணி 187 ரன் எடுத்தது. இதனையடுத்து, 188 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய வோர்செஸ்டர்ஷைர் அணியில் குப்தில்-ஜோ கிளார்க் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கிளார்க் 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குப்திலின் அதிரடி ஆட்டத்தால் 13.1 ஓவரில் 188 ரன் என்ற இலக்கை எட்டி வோர்செஸ்டர்ஷைர் அணி வெற்றி பெற்றது. 

டி20 போட்டிகளில் குப்தில் அடித்தது அதிவேக 4வது சதம் ஆகும். அவர் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசினார். ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய போது கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்தது தான் சாதனையாக உள்ளது. ரிஷப் பந்த் உள்ளூர் போட்டிகளில் 32 பந்துகளில் சதம் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆண்ட்ரிவ் சைமன்ஸ் (34) மூன்றாவது இடத்தில் இருக்க, டேவிட் மில்லர், ரோகித் சர்மா 4வது இடத்தில் உள்ளனர். ரோகித், டேவிட் மில்லருடன் 4வது இடத்தை குப்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.