சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பேட் தயாரித்து கொடுத்த நபர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரத்திலும் நலிவடைந்து பரிதாப நிலையில் உள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பை நகரத்தை சேர்ந்தவர் அஷரஃப் சவுத்ரி. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் அனைத்து சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் இவரை அங்கு காண முடியும். கையில் பெரிய பையுடனும், அதில் நிறைய கிரிக்கெட் பேட்களுடனும் வலம் வருவார். இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் இவர் தயார் செய்துகொடுக்கும் பேட்டில் தான் விளையாடுவார்கள். அத்துடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்ரிக்க வீரர் பஃப் டு பிளசிஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் பொலார்ட் ஆகியோரும் இவரது பேட்டில் தான் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசியுள்ளனர்.
கிரிக்கெட் பேட் செய்வதில் பெரும் வித்தைக்காரரான இவர் தற்போது வருமானம் இன்றி பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், இவருக்கு முற்றிலும் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடுமையான சிறுநீரகத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும் சில உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது பொருளாதார உதவி தேவைப்படுவதால் அவர் பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு எந்தவித தொகையும் வாங்காமல் 16 பேட்டுகளை அஷரஃப் அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.