தோனி ட்விட்டர்
விளையாட்டு

”சிறுவனைப்போல் கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபில் தொடர், அடுத்த மாதம் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இதன் மிகப்பெரிய முகமாக ‘தல’ தோனி அறியப்படுகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் ஆனாலும், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே அவருடைய வயது காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் அவர் ஐபிஎல்லில் விளையாடுவாரா என கேள்விகள் எழும். தற்போது ஐபிஎல் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டபடி, இந்த ஆண்டும் அவர் விளையாட உள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக தோனி தெரிவித்துள்ளார்.

MS Dhoni

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019-இல் நான் ஓய்வு பெற்றேன். கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். அதை இன்னும் சில ஆண்டுகள் தொடர விரும்புகிறேன். என்னால் முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் பள்ளியில் படிக்கும் போது, ​​சிறுவயதில் எப்படி அனுபவித்தேனோ, அதை போலவே நான் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன்.

நான் ஒரு காலனியில் வசித்தபோது, ​​மதியம் 4 மணிக்கு விளையாட்டு நேரம், அதனால் நாங்கள் அடிக்கடி கிரிக்கெட் விளையாடச் செல்வோம். ஆனால் வானிலை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். அதே மாதிரியான அப்பாவித்தனத்துடன் விளையாட விரும்புகிறேன். ஆனால் சொல்வது எளிது, செய்வது கடினம்.

ஒரு கிரிக்கெட் வீரராக, இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன், ஏனென்றால் கடந்த காலத்திலும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்று நான் கூறியுள்ளேன்.

கிரிக்கெட் வீரர்களாகிய எங்களுக்கு, நாங்கள் பெரிய மேடைக்குச் செல்லும்போதோ அல்லது சுற்றுப்பயணம் செய்யும்போதோ, நாட்டிற்காக விருதுகளை வெல்ல ஒரு வாய்ப்பு இருந்தது, எனவே எனக்கு எப்போதும் முதலில் வருவது நாடுதான்” எனத் தெரிவித்த அவர், ”இளம் வீரர்கள் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தூக்கம் மற்றும் பழக்கவழக்கத்தில் ஒழுக்கத்தை வலியுறுத்த வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.