பயிற்சி ஆட்டத்தின் போது தோனி சிக்ஸர் விளாசும் வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவுள்ளதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுக் கொண்டே செல்கிறது.
இதனிடையே, ஐபிஎல் அணிகளும் தங்கள் பங்கிற்கு பயிற்சி ஆட்டத்தில் கலக்கலான வீடியோக்களை தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர். ரிஷப் பண்ட், ரோகித் சர்மா என வீரர்கள் அதிரடியாக சிக்ஸர் விளாசும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும், படம் ஒன்றினையும் பதிவிட்டுள்ளது. தோனி சென்னை வீரர் பத்ரிநாத்திற்கு ஏதோ வழிகாட்டுவது போல் உள்ளது.
அதனைவிட, சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ தான் வெறித்தனமாக உள்ளது. அதில் தோனி தனக்கு வீசப்பட்ட பந்தினை சிக்ஸருக்கு விளாசுகிறார். தோனி சிக்ஸர் விளாசிய வீடியோ ஏற்கனவே நிறைய வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், இந்த வீடியோ சற்றே வித்தியாசமானது. ஏனெனில் தோனி அடிக்கும் பந்து மைதானத்திற்கு வெளியே ஏதோ ஒரு மரங்களுக்கு நடுவில் சென்று விழுகிறது. பந்து எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விழும்போதே பந்து தொலைந்துவிட்டது என ஒரு வீரர் பின் குரலில் சொல்லுகிறார். அதேபோல், முரளி விஜயும் இந்த ஷாட் குறித்து வியந்து பேசுகிறார்.
தோனி சிக்ஸருக்கு விளாசிய பந்து எல்லைக் கோட்டிற்கு வெளியே தொலைந்து போனது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேகத்தில் கேப்டன் தோனி களத்திலும் காட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ரோகித் சர்மா சிக்ஸர் விளாசிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்து. அந்த பந்து எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று கொண்டிருந்த பேருந்தின் கூரை மீது விழுந்தது குறிப்பிடத்தக்கது.