தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நேற்று வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார். அவரை ரன் அவுட் ஆக்கிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அந்த பந்தை அவர் மீது எறிந்தார். இது டிவியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வீரர்கள் நடத்தை விதிகளுக்கு எதிராக, லயன் இப்படி நடந்துகொண்டது நடுவர்களையும் மற்ற வீரர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக்கை, ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் திட்டிய விவகாரம் சர்ச்சையான நிலையில் இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பானது.
இது பற்றி தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளிஸ் கூறும்போது, ’இதுபோன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடப்பதுதான். இதுபற்றி நாங்கள் புகார் ஏதும் சொல்வதில்லை. வில்லியர்ஸ் மீது லயன் பந்தை எறிந்த வீடியோ கிளிப்பிங்கை நேற்று காலை வரை நாங்கள் பார்க்கவில்லை. இது எங்களுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை’ என்றார்.