விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் மோசமான ரன் குவிப்பு - 3வது இடத்தில் அகமதாபாத் டெஸ்ட்

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன. இந்த சூழலில் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்படியும் இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கும் மேலான ரன்களை எடுக்க வேண்டுமென்று கணக்கு போட்டிருக்கும். ஆனால் அந்த கணக்கையெல்லாம் தவிடு பொடியாக்கினர் இந்திய பந்து வீச்சாளர்கள். அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகள், அஷ்வின் 3 விக்கெட்டுகள் மற்றும் இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தை 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருக்கிவிட்டனர். தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி குவித்த குறைந்தபட்ச ரன்களின் பட்டியலில் இந்த ஸ்கோர் அடங்கியுள்ளது. 

முன்னதாக கடந்த 1971இல் ஓவலில் 101 ரன்களுக்கும், 1979 - 80இல் மும்பையில் 102 ரன்களுக்கும், 1986இல் லீட்ஸில் 128 ரன்களையும் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. அதாவது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.