விளையாட்டு

நாளை தொடங்குகிறது மகளிர் டி20 உலகக்கோப்பை! இந்திய அணியில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

webteam

மகளிருக்கான 8வது டி20 உலகக்கோப்பை திருவிழா நாளை முதல் தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நாளை (பிப்ரவரி 10) தொடங்க இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும், குரூப் 2இல் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். இந்த தொடரின் முதல் போட்டியில் (நாளை) தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 12ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் பங்கேற்கிறது.

இந்த நிலையில் மகளிர் டி20 உலக்கோப்பை பற்றி சில முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

* மகளிர் டி20 கோப்பை 2009ஆம் ஆண்டுமுதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் உலகக்கோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி 5 முறை வென்றுள்ளது. அதிலும் தொடர்ச்சியாக 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றிய ஆஸ்திரேலியா, 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸிடம் இழந்தது. ஆனால், மீண்டும் 2018 மற்றும் 2020இல் தட்டிச் சென்றது. இதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்துபோனது. ஆனால், இந்த முறை உலகக்கோப்பையை எப்படியும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் சீனியரும் ஜூனியரும் கலந்த அணி களமிறங்க உள்ளது.

* இந்த தொடர் மூலம், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 150 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை எட்டவுள்ளார். தற்போது வரை அவர் 146 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதுபோல், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் அண்டர் யு19 டி20 உலகக் கோப்பையில் அறிமுகத் தொடரிலேயே இந்திய அணிக்கு முதல் கோப்பையை வென்று தந்த கேப்டன் ஷபாலி வர்மா, இந்த உலகக்கோப்பையில் சீனியர் அணியினருடன் கைகோர்க்கிறார்.

* ஷபாலி வர்மா, ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் கலந்துகொண்டவர் ஆவார். இவருடன், அண்டர் 19 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற சக வீராங்கனையான ரிச்சா கோஷும் இப்போது சேர்ந்துள்ளார். இவர்களைப்போல அந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து, வங்கதேசம், அயர்லாந்து உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்த ஜூனியர் வீராங்கனைகளும் இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர்.

* இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். ஹர்மன்ப்ரீத் கவுர் இதுவரை, 30 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2009 உலக்கோப்பை முதல் அவர் விளையாடி வருகிறார். அவர் உலகக்கோப்பை தொடரில் இதுவரை 458 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 அரைசதமும், 1 சதமும் அடக்கம். உலகக்கோப்பை சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் (5 பேர் சதம் அடித்துள்ளனர்) அவர் 4வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

இந்திய அணி வீராங்கனைகள்:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜி ஷிகாயக் பன்.

இந்திய அணி போட்டி விவரம்:

பிப்ரவரி 12 - இந்தியா - பாகிஸ்தான்
பிப்ரவரி 15 - வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா
பிப்ரவரி 18 - இந்தியா - இங்கிலாந்து
பிப்ரவரி 20 - இந்தியா - அயர்லாந்து
பிப்ரவரி 23 - முதலாவது அரையிறுதி
பிப்ரவரி 24 - இரண்டாவது அரையிறுதி
பிப்ரவரி 26 - இறுதிப்போட்டி

- ஜெ.பிரகாஷ்