விளையாட்டு

"தோனி, கோலி, சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" பாக். வீரர் கம்ரான் அக்மல்

jagadeesh

இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, தோனி, சச்சினிடமிருந்து உமர் அக்மல் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது சகோதரருக்கு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் யோசனை கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் டி20 தொடரில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் ஊழலில் ஈடுப்பட்டதற்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதித்திருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது குறித்து கவலையடைந்த அவரது சகோதரர் கம்ரான் அக்மல் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் "உமர் அக்மலுக்கு நான் கொடுக்கும் ஆலோசனை என்னவென்றால். அவர் தவறு செய்திருந்தால் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர் "உமர் இன்னும் இளைஞர்தான். அவருக்கு வாழ்க்கையில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கிறது. ஆனால் அவர் நிச்சயமாக விராட் கோலிியடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் தொடக்க காலத்தில் இருந்த கோலி வேறு இப்போது இருக்கிறவர் வேறு. அவர் தன்னுடைய பாணியை எவ்வளவு அழகாக மாற்றிக்கொண்டார். அதைச் செய்ததால்தான் இப்போது அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதேபோல தோனி, சச்சினிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் கம்ரான்.

சர்ச்சைகள் குறித்துப் பேசிய கம்ரான் "இப்போது பாருங்கள் பாகிஸ்தானின் பாபர் அசாமும் சர்வதேச பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடத்துக்குள் இருக்கிறார். சர்ச்சைகளில் சிக்காமல் வாழ்வது எப்படி என்பதையும் தோனி மற்றும் மதிப்பிற்குறிய சச்சின் அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் இருவரும் மிகச் சிறந்த உதாரணங்களாக நம்மிடையே வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு வருங் காலங்களில் உமர் ஜொலிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.